ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா: திங்கள் முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் -கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக சில புதிய கட்டுபாட்டு விதிகள் அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,
கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6.00 மணி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்வுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் கண்காணித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் 09.08.2021 முதல் அமல்படுத்தப்படுகிறது.
1.ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் (Bakery) உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
2. மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
3.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேனீர் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
4.திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
5. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
6.ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
7. கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT PCR பரிசோதனை சான்றிதழ் (Negative Certificate) அல்லது கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
8.ஈரோடு மாவட்டத்தில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைகடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகமாக மக்கள் கூடும் இடத்தின் பெயர்
ஈரோடு :
ஈஸ்வரன் கோவில் வீதி, TVS தெரு, காந்திஜி ரோடு,
பிருந்தாவீதி, பழையசென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, RKV ரோடு, மேட்டூர் ரோடு - ஸ்டோனிபாலம், வ.ஊ.சிபூங்கா, காவேரிரோடு
பவானி :
காவேரிரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடிதுறை
கோபி :
மார்க்கெட், கடைவீதி
சத்தியமங்கலம் :
வரதம்பாளையம் நிர்மலா தியேட்டர் ஜங்சன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்வேஸ்வரா பேருந்து நிலையம், டி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், டிஜிபுதூர்
எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu