ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் குட்கா பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி  பகுதியில் குட்கா பொருள் விற்பனையை  தடுக்க நடவடிக்கை
X

ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மளிகை கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த 86 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவிட்டார்.

இதன்பேரில், பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்எஸ்ஐ பாபு மற்றும் போலீசார் நேற்று மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அந்தியூர் மேட்டூர் பிரிவில் ஜெயராஜ் மகன் ரத்தின பாண்டியன் (57) என்பவரின் மளிகைக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பவானியை அடுத்த சித்தாரில் மளிகைக் கடை நடத்தும் ரங்கசாமி மகன் முனியசாமி (45) தனக்கு புகையிலைப் பொருட்களைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்பேரில், சித்தார் விரைந்த போலீசார் முனியசாமியின் கடையில் சோதனை நடத்தி புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தனக்கு மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் காரில் வரும் இருவர் புகையிலைப் பொருட்களை சப்ளை செய்வதாகக் கூறியுள்ளார்.அவர்களுக்கு செல்போன் மூலம் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தேவைப்படுவதாக முனியசாமி மூலம் போலீசார் வரவழைத்தனர். அப்போது, புகையிலைப் பொருட்களுடன் காரில் வந்த இருவரைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

விசாரணையில், பவானி வரதநல்லூர் மூலக்காட்டைச் சேர்ந்த பெரியசாமி மகன் சதீஷ்குமார் (22), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஓலப்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ்குமார் (23) என்பது தெரிந்தது.இவர்கள் காரில் கொண்டு வந்த ரூ. 49, 600 மதிப்புள்ள ஹான்ஸ், விமல் பாக்கு உள்பட 86 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள், கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து ரகசியமாக கடத்தி வந்து, கார் மூலமாக சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரையே குடோனாக பயன்படுத்தும் இவர்கள், புகையிலைப் பொருட்களை எங்கும் இருப்பு வைப்பதில்லை.கேட்கும் இடங்களுக்கு நேரில் சென்று விநியோகம் செய்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நால்வரையும் கைது செய்த பவானி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story