ஈரோட்டில் சிறுதானிய உணவுகளின் மகத்துவம் குறித்து தெரு நாடகம் வாயிலாக விழிப்புணர்வு

ஈரோட்டில் சிறுதானிய உணவுகளின் மகத்துவம் குறித்து தெரு நாடகம் வாயிலாக விழிப்புணர்வு
X
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் சிறுதானிய உணவு வகைகளின் மகத்துவம் குறித்து, தெரு நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் சிறுதானிய உணவு வகைகளின் மகத்துவம் குறித்து, தெரு நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி உத்திரவிட்டிருந்தது. இதன்படி, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிவுறுத்தினர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஈரோடு பேருந்து நிலையத்தில் பாரம்பரியமிக்க கலையான தெரு நாடகம் வாயிலாக சிறுதானிய உணவுகள், பராம்பரிய உணவுகள், செறிவூட்டப்பட்ட உணவுகள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்து அனைவரையும் கவரும் வகையில் நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பயன்பாடு, உணவுப் பொருட்களை செய்தித்தாளில் சுற்றி விற்பனை செய்தல், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை திரும்ப பயன்படுத்துதல், செயற்கை வண்ணங்களை உணவில் சேர்க்கப்படுவது ஆகியவற்றால் பொது மக்களின் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

தொடர்ந்து, உணவு பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களும் கலப்படங்களை கண்டறிவதற்கான எளிதான வழிமுறைகளும், உணவுப் பாதுகாப்புத் துறையின் நடமாடும் ஆய்வுக்கூட வாகனத்தின் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், நிகழ்ச்சி அனைவருக்கும் புரியும் வகையில் நாடகம் பாணியில் எடுத்துக் கூறப்பட்டதால் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன், அருண்குமார், சூர்யா, சுதர்சன் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story