விஜயமங்கலம் சுங்கச்சாவடி மேலாளரை தாக்கிய 5 பேரை கைது

சுங்க சாவடி மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சிசிடிவி காட்சி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் வழியாக, கோவையில் இருந்து சேலத்தை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றது. உடனே சுங்கச்சாவடி அலுவலர், கார் செல்ல முடியாதபடி, காரின் குறுக்கே இரும்பு தடுப்பை போட்டார்.
இதனால் கோபம் அடைந்த, காரில் வந்த கும்பலில் ஒருவர், தான் மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் என்றும், அதனால் தன்னுடைய காருக்கு வரி செலுத்த முடியாது என்றும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதே காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 4 பேரும் சுங்கச்சாவடி அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.
இதுயறிந்த சுங்கச்சாவடி மேலாளர் கணேஷ் (வயது 33) என்பவர் அங்கு சென்று, இது முதல்முறை என்பதால், வரி இல்லாமல் இந்த காரை செல்ல அனுமதிக்கிறேன். மீண்டும் ஒருமுறை வந்தால், அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட காரில் இருந்தவர்கள் கணேசை தரக்குறைவாக திட்டியுள்ளார்கள். மேலும் தாக்கியும் உள்ளனர்.
இது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதை பார்த்த சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள், அங்கு வந்து கணேசை காப்பாற்றினார்கள். பின்னர் அவரை தாக்கியவர்களை சுற்றி வளைத்து பிடித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை அரசமரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (49), திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (38), கார் டிரைவர் நெல்லை பாப்பான்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து (38), மதுரை செங்கிப்பட்டியை சேர்ந்த சந்திராசெல்வம்(28), ஆளவந்தானை சேர்ந்த ஆனந்தி (51) ஆகியோர் என்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu