ஈரோடு மாவட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை பெற டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தின் முகப்பு.
ஈரோடு மாவட்டத்தில் இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் டிச. 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை (NMMSS), 15வது நிதி ஆணைய சுழற்சியில், 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன் திட்ட செலவு ரூ. 1827 கோடி.
இத்திட்டத்தின் நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கொள்வதைத் தடுத்து நிறுத்தி அவர்களை கல்வியில் அடுத்த நிலைக்கு தொடர ஊக்குவிப்பது ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் உள்ள நன்றாக படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதம் ரூ. 1000 வீதம் ஆண்டுக்கு ரூ. 12000 வழங்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேசியக் கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் இத்திட்டம் பற்றிய விவரம் உள்ளது. கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதில் 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2023-24-ஆம் ஆண்டுக்கு தமிழகத்தைச் சோ்ந்த 3,093 மாணவா்களுக்கு இத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான பெற்றோரின் உச்சகட்ட வருமான வரம்பு ரூ. 2.5 லட்சம் ஆகும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் டிச. 31ம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தை சரிபாா்க்க கடைசி நாள் 2024 ஜன. 15ம் தேதி ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள், விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொலை பதிவு செய்து, விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நடப்பாண்டில், புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, முறையே 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (https://scholarships.gov.in) தங்கள் விவரங்களை பதிவு செய்து, பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை புதிய இணைப்பின்கீழ் பதிவு செய்வதோடு, உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu