நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த எம்எல்ஏ
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக, அந்தியூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. கடந்த மாதம் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அதனைத் தொடர்ந்து எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பிய நிலையில், நேற்று அந்தியூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் சந்தியபாளையம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
பெரிய ஏரியின் கிழக்கு பகுதி, மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள உபரி நீர் செல்லும் பாதையிலும் தண்ணீர் வெளியேறுகிறது. இதன் காரணமாக, அந்தியூர் நகரின் முக்கிய வீதிகளான பெரியார் நகர், கண்ணப்பன் கிணற்று வீதி, நேருநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகும் அபாயம் உள்ளதால், வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உபரி நீர் செல்லும் வழியில் உள்ள 35 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறு இடத்திற்கு பாதுகாப்பு கருதி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உபரி நீர் செல்லும் வழியில் வெளியேறிய தண்ணீரை, அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் மலர்தூவி வரவேற்றார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மகிழ்ச்சியின் மிகுதியில், ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை கையால் அள்ளி பருகி சுவைத்தார்.
மேலும், நீர் வழி பாதைகளை ஆய்வு செய்து பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் விஜயகுமார், பொதுப்பணித்துறை பொறியாளர் ரவி முற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu