ஈரோடு: கிராமப்பகுதியில் வீடு வீடாகச்சென்று சளி காய்ச்சல் பரிசோதனை

ஈரோடு: கிராமப்பகுதியில் வீடு வீடாகச்சென்று சளி காய்ச்சல் பரிசோதனை
X
தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஈரோடு மாவட்ட கிராம பகுதிகளில், வீடுவீடாகச் சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில தொற்று வேகமாக பரவி வருகிறது. இதேபோல் தினசரி உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியன ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில், ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று தற்போது கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராம செயலாளர்கள்,சுகாதாரத் துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நூறு வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நோயின் தன்மைக்குகேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா குறித்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!