கருமந்துறை பகுதியில் பராமரிக்கப்படாத அரசு பஸ்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள கல்வராயன் மலைத் தொடரின் கருமந்துறை பகுதிக்கு ஆத்தூர், வாழப்பாடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து கருமந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து கல்வராயன் மலைச்சாலையின் மேடான பகுதியை அடைந்தபோது, போதிய இழுவைத்திறன் இல்லாமல் திடீரென நின்றுவிட்டது. மலைப்பாதையின் ஏற்றத்தை கடக்க முடியாமல் மோட்டார் திணறியதால் பேருந்து முற்றிலும் நின்றுபோனது. நீண்ட நேரமாகியும் பேருந்து மீண்டும் இயக்கப்படாததால், அதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இறுதியில் பொறுமையிழந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி, எந்தவித உதவியும் இல்லாத நிலையில் பின்பக்கத்தில் இருந்து பேருந்தை சிறிது தூரம் தள்ளி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. சிலர் நீண்ட தூரம் நடந்தே தங்கள் இலக்கை அடைய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகினர். இதுபோன்று மலைப்பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி இழுவைத்திறன் இழந்து நின்றுவிடுவதாகவும், இதனால் மலைப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu