ஈரோட்டில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உச்ச கட்ட பரபரப்பு

ஈரோட்டில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உச்ச கட்ட பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (2ம் தேதி) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விடுமுறை அளித்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விடுமுறை அளித்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியது.

2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவைச் சேர்ந்த போலீசார், அதிவிரைவு படை போலீசார் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியில் 9 மணி நேரம் தீவிர சோதனை செய்தனர்.

பின்னர் அது புரளி என தெரிய வந்தது. இதன் பின்னரே ஆசிரியர்கள், பெற்றோர்கள் போலீசார் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை காலை மீண்டும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விவரம், ஈரோடு, பூந்துறை ரோடு செட்டிபாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர். அப்போது மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வந்து விட்டனர். அவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றி அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதேபோல் ஆசிரியர்கள் , ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர்.

மேலும் மாணவ ,மாணவிகளின் பெற்றோர்களின் செல்போனுக்கு இது தொடர்பாக ஒரு குறுந்தகவலையும் அனுப்பினார். இதை பார்த்து பெற்றோர்கள் இன்று எதற்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று குழம்பியவாறு பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த பிறகு தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன், டி.எஸ்.பி முத்துக்குமரன் ஆகியோர் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு, கோவையிலிருந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் படையைச் சேர்ந்த போலீசார், அதிவிரைவு படை போலீசார் என நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு வகுப்பறையாக அங்குல அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்ந்து இச்சம்பவம் 2வது முறையாக ஈரோட்டில் நிகழ்ந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story