ஈரோடு திண்டலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 180 அடி உயர முருகன் சிலை: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் திண்டலில் வேலாயுதசுவாமி என்னும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும், இக்கோவில் நகர மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இக்கோவிலில் உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் இக்கோவிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலை மற்றும் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதைக்கு செல்வதற்கு புதியதாக படிவழிப்பாதை அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஈரோடு மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மேலும், இக்கோவிலில் அன்னதானத் திட்டத்தில் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்திற் கொண்டு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 200 பக்தர்களுக்கும், கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu