அந்தியூர்: கொம்பு தூக்கி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
கரும்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள கொம்பு தூக்கி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (மார்ச்.08) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த நகலூர் அருகே, கரும்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கொம்பு தூக்கி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (மார்ச்.08) புதன்கிழமை நடைபெற்றது. இன்று காலை பொங்கல் வைத்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர், கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பகல் 1 மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 26 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் முதலில் பூசாரி மூன்று முறை சுற்றிவந்து இறங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிலர் கைக்குழந்தையுடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மதியம் 2 மணியளவில் மாவிளக்கு பெரும்பூஜை நடந்தது. இதில், அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, கீழ்வாணி, மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், கோபி, ஆப்பக்கூடல், பவானி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் அம்மனை வழிபட்டனர். இக்கோவில் இருக்கும் வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வெடிகள் வெடிக்க அனுமதிக்கவில்லை.
மேலும், கோவில் நிர்வாகம் சார்பில், அந்தியூரில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த பக்தர்களை, இன்று மாலை, 5 மணிக்கு மேல் வனத்துறை அதிகாரிகள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். அந்தியூர் மற்றும் பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோயிலின் மறுபூஜை வருகிற 15-ம் தேதி நடக்கிறது. குண்டம் திருவிழாவிற்காக ஏற்பாட்டினை கீழ்வாணி மூங்கில்பட்டி நடேஸ்வரன் தர்மகர்த்தா மற்றும் பூசாரி மாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu