கோபி பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன்
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜன.6ம் தேதி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (ஜன.8) இரவு 10 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 50 அடி குண்டத்தில் எரிகரும்பு, விறகுகள்) வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று முதலே குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று (ஜன.9) அதிகாலை திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு தலைமை பூசாரி சேனாதிபதி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தொடர்ந்து கோவில் பூசாரிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து நாளை (ஜன.10) தேரோட்ட நிகழ்ச்சியும், 11ம் தேதி இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பல்லக்கில் கோபி நகருக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், நடைபெற உள்ளது.
இதனையடுத்து, 12ம் தேதி கோபியில் தெப்போற்சவமும், 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவானது 18ம் தேதி மறுபூஜையுடன் நிறைவு பெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu