ஈரோட்டில் நீட் தேர்வினால் உயிரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

ஈரோட்டில் நீட் தேர்வினால் உயிரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் அதிமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி, ஆட்சிக்கு வந்த திமுகவால் இறந்த, 22 மாணவ, மாணவியருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் எம்எல்ஏ, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வால் இறந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நீட் ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், சினிமாவில் இருந்து வந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தன்னிடம் உள்ளது என பொய்யாக கூறி ஆட்சிக்கு வந்தனர்.
இன்று வரை அந்த ரகசியத்தையும் கூறவில்லை. நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை. மக்களிடம் பொய் கூறுவதுபோல, உச்சநீதிமன்றத்திலும் நீட் தேர்வு ரத்துக்காக வழக்கு தொடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம், கடுமையான கண்டித்ததும், வழக்கை வாபஸ் பெற்று கொண்டனர்.
இவர்களது பேச்சை நம்பிய மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பு கிடைக்காமல், 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். இனிமேலும், அதுபோன்ற தற்கொலை நிகழாமல் இருப்பதற்காகவும், இறந்த மாணவ, மாணவியருக்கு அஞ்சலி செலுத்தவும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கிறோம் என்றார்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் உத்தரவுப்படி, மாணவரணி சார்பில் நீட் தேர்வால் இறந்த, 22 மாணவ, மாணவியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினோம்.
நீட் தேர்வு என்பதை, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரத்து செய்வோம், என்றார்கள். உச்சநதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்ததும், வழக்கை வாபஸ் பெற்றார்கள். அதன்பின், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுவரை, அதற்கான நல்ல தீர்வை காண இயலவில்லை. 1 கோடி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி சார்பில் முயற்சி நடந்தும், இன்று வரை வெற்றி காணவில்லை.
எல்லோரது கனவும் நீட் தேர்வு ரத்தும், மாணவர்களுக்கு உள்ள கஷ்டங்களாக தெரிவதால், அதை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம். ஆனால், திமுக நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் எனக்கூறி, 4 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியை நடத்திவிட்டு, அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வுக்காக, 412 இடங்களில் மையங்கள் அமைத்து பயிற்சி வழங்கினோம். அப்பயிற்சி கூட இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று நிலைமை மாறி, நீட் தேர்வு பயிற்சிக்கு பெருந்தொகையை மாணவர்கள் செலவிட வேண்டி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை – மருத்துவ கல்வித்துறை மூலம் இணைந்து வழங்கி அதன் மூலம் மாணவர்கள் எதிர்காலம் சிறப்பானது. 720 மதிப்பெண்ணுக்கு, 510 மதிப்பெண் பெறும் தனியார் பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும்.
ஆனால், அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 150 முதல், 200 மதிப்பெண் பெற்றாலே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஆட்சியில் வாய்ப்புகளை சரியான முறையில் எடுத்து சென்று வழங்கினோம். தற்போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி, 4 ஆண்டு காலம் கடந்து விட்டது.
இன்று வரை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த அரசு என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu