ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோா் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்கலாம்!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் தலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2024-25-ஆம் ஆண்டு சட்டபேரவை புதிய அறிவிப்பில் ருபாய் 50 கோடி மதிப்பீட்டில் இரண்டு தொழிற்பேட்டைகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில், தற்போது முதலிபாளையம் தொழிற்பேட்டையில் அடிப்படை புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஈங்கூர் தொழிற்பேட்டையிலும் புனரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டு 3 மாத காலத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ, ஒற்றைமாடி /பலமாடி தொழிற்கூடங்களாவோ அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப குறுகிய / நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளது.
இத்திட்டத்தில், பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு, ஏதேனும் முறையில் தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன்பாக தள பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 4ம் தேதி அன்று காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம். மேலும் முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல துறையின் சார்பாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு தொழில் முனைவோர்கள் 9150277723 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu