ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். அருகில்,  தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து கூடுதலாக 1,332 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து கூடுதலாக 1,332 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கட்கிழமை (இன்று) அனுப்பி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்கும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக, கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.


இதனையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 27ம் தேதி முடிவடைந்ததுடன் கடந்த 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யும் பணி நிறைவடைந்தது.

தொடர்ந்து, இறுதி வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாளான 30ம் தேதி 31 நபர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், 17 ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிடவுள்ள 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவிற்கு (1) என 32 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் தேவைப்படுகிறது. அதேபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் தேவைப்படுகிறது.

இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கடந்த 22ம் தேதி கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஸ்ட்ராங் ரூம்மில் சீலிடப்பட்ட அறையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 1) ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள் மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,111 வாக்குச்சாவடி மையங்களுக்கு 20 சதவீதம் கூடுதலாக 221 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, மேற்கண்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேர்த்து 1,332 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்

முன்னதாக, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கிடங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை தொடங்கி வைத்து அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), சொரூபராணி (தொடர்பு அலுவலர் இவிஎம்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings