ஈரோடு மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: 1,972 மாணவிகள் பயன்; ஆட்சியர் தகவல்
ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி காமராஜர் அரங்கில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.உடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 1,972 மாணவிகள் பயனடைவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று (டிச.30) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி காமராஜர் அரங்கில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதுமைப் பெண் திட்ட விரிவாக்க மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 15,739 மாணவியர்களும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 13,837 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் முதலில் அரசுப்பள்ளிகளில் பயின்ற பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும். மாணவிகள் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒரு குடும்பத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயனடையலாம்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவிகள் முதல் பட்டப்படிப்பினை முடிக்கும் வரை மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.1,000 நேரடியாக பற்று வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, 79 கல்லூரிகளில் பயிலும் 1,972 மாணவியர்கள் பயன்பெறுகின்றனர்.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது, அவர்களின் மேற்படிப்பிற்கு மட்டுமல்லாமல், குழந்தை திருமணத்தை தடுக்கவும் ஏதுவாக அமைகின்றது.
மேலும், பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்து தெரிய வந்தால் 8903167788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.3,000 வழங்கப்படும். மேலும் 1098 என்ற கட்டணமில்லா எண்ணிலும் குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை பெற்றுக் கொண்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி ஆரோக்கிய மேரிஸ், அல்அமீன் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஆயிஷா ஷமனா, ஈரோடு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கவிபாரதி, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயிலும் மாணவி மோகனபிரியா, வேளாளர் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி புனிதா உள்ளிட்ட மாணவியர்கள் தங்களது மேற்படிப்பிற்கு மாதம் ரூ.1,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu