அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சிறுவன் சுட்டதில் தொழிலாளி படுகாயம்!

அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சிறுவன் சுட்டதில் தொழிலாளி படுகாயம்!
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சிறுவன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

அந்தியூர் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சிறுவன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் சொந்தமாக 'ஏர்கன்' நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். குண்டு நிரப்பப்பட்ட அந்த துப்பாக்கியை அவர் வீட்டின் ஓரிடத்தில் தொங்க விட்டிருந்தார்.

இந்த நிலையில், வெளியூரை சேர்ந்த உறவினர்கள் அவர்களுடைய குழந்தைகளுடன் நேற்று வெங்கடாசலத்தின் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் சிறுவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, தொங்க விடப்பட்டு இருந்த துப்பாக்கி சிறுவன் ஒருவனின் கண்ணில் பட்டது.

அதைத்தொடர்ந்து அவனுக்கு அதை எடுத்து விளையாட வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. இதனால் அவன் தொங்கிக்கொண்டு இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விளையாட ஆரம்பித்தான். அப்போது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் எதிர்பாராதவிதமாக வெங்கடாசலத்தின் உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் வெங்கடாசலம் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரது உடலில் பாய்ந்திருந்த குண்டை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story