அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
X

கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், இடைத்தரகர் அருள்ராஜா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 44). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மேம்பத்தி (அ) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஒலகடம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை அணுகினார்.

பிரகாஷ் பட்டா மாறுதல் செய்து தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று பிரகாஷ் கேட்டதாக தெரிகிறது. அதற்கு, கதிர்வேல் மறுத்துள்ளார். இறுதியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தந்தால் தான் பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று பிரகாஷ் உறுதியாக கூறியுள்ளார்.

பணம் தர விருப்பம் இல்லாத கதிர்வேல் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, கதிர்வேல் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு நேற்று சென்றார்.

அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரகாசிடம் கொடுத்தார். அவர் அதை அவரது அருகில் நின்று கொண்டிருந்த செல்லப்பகவுண்டன்வலசை சேர்ந்த இடைத்தரகர் அருள்ராஜா (39) என்பவரிடம் கொடுக்க சொன்னதாக தெரிகிறது. பணத்தை அருள்ராஜாவிடம் கதிர்வேல் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் மற்றும் இடைத்தரகர் அருள்ராஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், பிரகாஷ் மற்றும் அருள்ராஜா ஆகியோரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேம்பத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story