ஈரோட்டில் இன்று அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி கடையின் மீது மோதி விபத்து!

ஈரோட்டில் இன்று அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி கடையின் மீது மோதியதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மாவட்ட எல்லை பகுதியான சோதனைச்சாவடி அருகே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் அருகில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் தனது காரில் ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதியம் திரும்ப சென்று கொண்டிருந்தார்.
அப்போது கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் பாலம் வழியாக கார் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையோரம் குமார் என்பவர் வைத்திருந்த தள்ளுவண்டி கடையின் மீது மோதியது.
இதில், தள்ளுவண்டி மற்றும் கடையில் இருந்த கண் கண்ணாடி, தலைக் கவசம் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆதித்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கார் தாறுமாறாக ஓடி வருவதை முன்பே பார்த்து சுதாரித்த கடையின் உரிமையாளர் விலகிக் கொண்டதால் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu