ஸ்டார் தொகுதி: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி - ஓர் சிறப்பு பார்வை
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி (பைல் படம்).
3 அமைச்சர்களை கொண்ட நட்சத்திர தொகுதியாக உள்ள ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி குறித்து ஓர் சிறப்பு பார்வை.
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 17வது இடத்தில் இருப்பது ஈரோடு தொகுதி. இந்த தொகுதி 2008ல் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.
2008ல் மறுசீராய்வு :-
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு. 2008ல் தொகுதி மறுசீரமைப்பின் போது, திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்து சில தொகுதிகளை எடுத்தும், புதிய தொகுதிகளைச் சேர்த்தும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என்று 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் முடிவுகள்:-
ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின், 2009 நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முதல் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் செல்வகுமார சின்னையன் வெற்றி பெற்றார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக மீண்டும் கணேசமூர்த்தி களம் இறங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் யார்.?:-
5 ஆண்டுகள் கடந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எனவே ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போகும் கட்சிகள் எவை. போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற கேள்விகள் எழுந்து உள்ளது. தற்போதைய கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிட கட்சி விரும்பினால், தொகுதியை ஒதுக்கினால் போட்டியிட தயார் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
திமுக கூட்டணியில் அவர் இருந்தாலும், இந்த தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்பது திமுகவினர் எண்ணமாக இருக்கிறது. திமுக சார்பில் போட்டியிட இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அதிமுக சார்பில் ஆட்டோ பிரசாரம் தொடங்கி விட்டது. அதிமுக சார்பில் போட்டியிட ஆற்றல் அசோக்குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் பா.ஜனதா கட்சியில் இருந்த அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் சேர்ந்தவர் என்ற பேச்சு அடிமட்ட தொண்டர்கள் வரை பேசுபொருளாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏற்கனவே கார்மேகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா கட்சியில் போட்டியிட மூத்த தலைவர்களில் ஒருவரான பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் ஆர்வமாக உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் போய்க்கொண்டு இருந்தாலும் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட கட்சியினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
பொதுமக்கள் ஆர்வம்:-
இதனால் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதே நேரத்தில் யார் வேட்பாளர் என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது யார் வேட்பாளர் என்பதே ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நட்சத்திர தொகுதி ஈரோடு:-
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 அமைச்சர்களைக் கொண்ட நட்சத்திர தொகுதியாக ஈரோடு தொகுதி உள்ளது. அதாவது, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதியில் இந்நாள் அமைச்சர்கள் (ஈரோடு மேற்கு - அமைச்சர் முத்துசாமி, காங்கேயம் - அமைச்சர் சாமிநாதன், தாராபுரம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்) பதவியில் உள்ளனர். இப்படி 3 அமைச்சர்களை எம்எல்ஏக்களாக கொண்ட தொகுதியாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu