கவுந்தப்பாடி அருகே கார் மோதி விபத்து: தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கார் மோதி விபத்து: தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு
X
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கார் மோதிய விபத்தில், தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கவுந்தப்பாடி அருகே கார் மோதிய விபத்தில், தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 44). தனியார் நிறுவன மேலாளர். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் ஈரோடு- கவுந்தப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

இதேபோல், சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. காரை சத்தியமங்கலத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் ஓட்டினார். அவருடன் ஈஸ்வரன் என்பவரும் இருந்தார். இந்த நிலையில், கவுந்தப்பாடியை அடுத்த செட்டிக்கரடு என்ற இடத்தின் அருகே சென்றபோது, பச்சியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, முனுசாமியின் கார் எதிர்பாராதவிதமாக பச்சியப்பனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நவீன்குமார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நவீன்குமார், பச்சியப்பன், காரில் வந்த ஈஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நவீன்குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதில், படுகாயம் அடைந்த ஈஸ்வரன், பச்சியப்பன் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story