கோபியில் வங்கியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி: ஆட்சியர் பங்கேற்பு

கோபியில் வங்கியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி: ஆட்சியர் பங்கேற்பு

கோபியில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சியினை துவக்கி வைத்து பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டம் கோபியில் வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி இன்று (25ம் தேதி) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்றார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகள் வழங்கும் பொருட்டு வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி இன்று (25ம் தேதி) நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து பேசியதாவது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகள் வழங்கும் பொருட்டு வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


ஈரோடு மாவட்டம் பல்வேறு வகையான தொழில் வளங்கள் நிறைந்த மாவட்டமாகும். ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்க பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு ஜவுளி, விவசாயம், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் இலக்காக ரூ.840 கோடி நிர்ணயிக்கப்பட்டு முழுமையாக வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.1109 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.269 கோடி அதிகமாகும். மேலும், பெற்ற கடனை முறையாக செலுத்துவதிலும் ஈரோடு மாவட்டம் தலைசிறந்து விளங்குவது சிறப்பான விஷயமாகும்.

எனவே இந்த கடன்களை, தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை விரைந்து வழங்குவதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயனடைந்து, பல்வேறு சுய தொழில் செய்து, வருமானம் ஈட்டி தங்களது வாழக்கைத் தரத்தினையும் உயர்த்திக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

மேலும், அவர்களுக்கு எந்த வகையான சிறு, குறு தொழில்கள் மேற்கொள்ள திட்டங்கள் உள்ளது என்பது குறித்தும், அதன் மூலம் அவர்கள் எந்த வகையில் வருமானம் ஈட்டலாம் என்பது குறித்தும் தக்க அறிவுரைகள் வழங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, வங்கியாளர்கள், கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மகளிர் சுய உதவிக் குழுக்ளுக்கு கடனுதவிகள் வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) / திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) (பொ) ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முத்து சிதம்பரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த குமார், கூட்டுறவு வங்கி செயலாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story