தாளவாடி அருகே ஆசனூரில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

தாளவாடி அருகே ஆசனூரில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. தற்போது தாளவாடி மலைப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள நீர் நிலைகள் மற்றும் குட்டைகள் மழை நீரால் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புண்ணாக்கு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மாலை 5 மணி அளவில் ஆசனூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையில் புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், மற்றொரு லாரி சாலையோரம் சேற்றில் சிக்கிக் கொண்டது. இவ்விபத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது.
இதனால் அவ்வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவல் கிடைத்து வந்த புளிஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டு லாரியை அகற்றும் பணி நடைபெற்றது.
எனினும், இரவு 9.30 மணி ஆகியும் லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை, இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu