பவானி அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி
பவானி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை அகற்றக்கோரி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
தொப்பூர் - பவானி - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் முதல் கோணவாய்க்கால் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புறவழிச்சாலை பிரிவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின்வாரியத்தின் சார்பில் மின் கம்பம் அமைத்து டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற்றது.
பவானி வடக்கு மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் லிங்கேஸ்வரன் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் முக்கியமான சந்திப்பு சாலையில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெறாமல் மின் கம்பம் நடப்பட்டு உள்ளதாகவும், இதனால் வளைவில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சதாசிவம் மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார், மின்வாரிய ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்டித்ததோடு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu