ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெருந்துறை, கவுந்தப்பாடி நகராட்சிகள், முகாசிபிடாரியூர் பேரூராட்சி உருவாக்கம்
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பைல் படம்).
ஈரோடு மாநகராட்சியுடன் 4 ஊராட்சிகள் இணைப்பதுடன், பெருந்துறை, கவுந்தப்பாடி நகராட்சிகளாகவும், முகாசிபிடாரியூர் பேரூராட்சியாகவும் உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் நேற்று (ஜன.1) வெளியிடப்பட்டது.
அதன்படி, மக்கள் தொகை, வணிகம், தொழில் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய 4 கிராம ஊராட்சிகளையும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சியின் மக்கள்தொகை 40% அதிகரித்துள்ளதாலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை 79% அதிகரித்துள்ளதாலும், விவசாய நிலங்கள் 50%-க்கு கீழே உள்ளதாலும், இந்த ஊராட்சியின் நகர்ப்புறத் தன்மையைக் கருத்தில் கொண்டு கவுந்தபாடி ஊராட்சியுடன் சலங்கப்பாளையம் பேரூராட்சியினை இணைத்து நகராட்சி மன்றமாக அமைத்து உருவாக்கவும், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிந்த பின்னர், அப்பேரூராட்சியினை மேற்படி கவுந்தப்பாடி நகராட்சி மன்றத்துடன் இணைக்கப்பட உள்ளது.
பவானி நகராட்சியுடன் அருகே குருப்பநாயக்கன்பாலையம் ஊராட்சி இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சி நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே, பவானி நகராட்சியுடன் இவ்வூராட்சியினை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம் மற்றும் பாரியூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே. கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் மேற்படி 4 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூர் மற்றும் நொச்சிகுட்டை ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள். சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் மேற்படி 2 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி வேகமாக நகரமயமாக்கலை நோக்கி நகரும் ஊராட்சி மற்றும் ஊரக பகுதிக்கான தன்மை மிகவும் குறைவாக உள்ள நிலை (விளை நிலங்கள் 7 சதவீதம் மட்டுமே). எனவே, முகாசிபிடாயூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதேபோல், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய் ஊராட்சி, அம்மாபேட்டை பேரூராட்சியுடனும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அக்கரைகொடிவேரி ஊராட்சி பெரியகொடிவேரி பேரூராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu