கோபி அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து: விவசாயி பலி

கோபி அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து: விவசாயி பலி
X
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், விவசாயி பலியானார்.

கோபி அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், விவசாயி பலியானார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). விவசாயியான இவர் தனது காரில் செம்புத்தாம்பாளையத்தில் இருந்து பொலவக்காளிபாளையம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார்

அப்போது, தாசம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் ஒரு தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில், எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் பேருந்தின் பின்புறத்தில் சென்று சிக்கிக்கொண்டது. இதில் கோவிந்தராஜ் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். வெளியே வர முடியவில்லை. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்தின் அடிப்பகுதிக்குள் சிக்கிய காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கொண்டு வர முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு காரை மீட்கும் பணி நடந்தது. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு கார் மீட்கப்பட்டது. அப்போது, காரில் கோவிந்தராஜன் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதி நொறுங்கி சேதம் அடைந்திருந்தது. அதேபோல் கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story