ஈரோடு மருத்துவமனையில் மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து

ஈரோடு மருத்துவமனையில் மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து
X

கைது செய்யப்பட்ட நந்தகோபால்.

ஈரோடு அரசு மருத்துவமனயைில் மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 29). இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரியும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் இளங்கோவும் (23) பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இதையறிந்து நந்தகோபால் ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார். ஆனால், ராஜேஸ்வரி, இளங்கோவுடன் கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இளங்கோவை சந்திக்க ராஜேஸ்வரி சாவடிபாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். நந்தகோபால் இதைப்பார்த்து ராஜேஸ்வரிக்கு தெரியாமல் பின்தொடர்ந்துள்ளார். அங்கு ராஜேஸ்வரியும், இளங்கோவும் தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகோபால், ராஜேஸ்வரி மற்றும் இளங்கோவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட் டத்தில் நந்தகோபால் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராஜேஸ்வரியையும், இளங்கோவையும் சரமாரியாக குத்தினார்.

இதில், ராஜேஸ்வரிக்கு முகத்தில் காயமும், இளங்கோவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரது சத்தமும் கேட்டு அப்பகுதியினர் வருவதை பார்த்த நந்தகோபால் அங்கிருந்து தப்பிசென்றார்.இதையடுத்து ராஜேஸ்வரியையும், இளங்கோவையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர். அங்கு பெண்கள் வார்டில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வார்டுக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் நந்தகோபால் சென்றார். அங்கு தனது மனைவி ராஜேஸ்வரியுடன், இளங்கோ இருப்பதை பார்த்த நந்தகோபால், ஆத்திரம் அடைந்து தன்னிடம் இருந்த கறிவெட்டும் சுத்தியால் இளங்கோவை சரமாரியாக வெட்டினார். இதில், இளங்கோவுக்கு கழுத்து, வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. ஊழியர்கள் நந்தகோபாலை பிடிக்க முயற்சித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இளங்கோ ஈரோடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய நந்தகோபாலை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது