ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.35 லட்சம் மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கிளியம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் , நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நான் முள்ளாம்பரப்பு பகுதியில் டி.வி. எலக்ட்ரானிக்ஸ் பழுது நீக்கும் மையம் 11 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன். இதற்காக கடந்த 2017-ம் ஆண்டில் ஜிஎஸ்டி எண் பெற்றேன்.
இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் 2021ம் ஆண்டு தனது நிறுவனத்தை மூடி விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டேன். மேலும், ஜிஎஸ்டி எண்ணை ரத்து செய்யுமாறு ஆடிட்டர் மூலம் அப்போதே விண்ணப்பம் செய்தேன்.
இந்த நிலையில், வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகையாக ரூ.35 லட்சம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் எனக்கு நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தேன்.
அப்போது, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாதங்களில் ஜவுளி, பிளாஸ்டிக், இரும்பு வணிகம் என 6 நிறுவனங்களில் தனது ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.1 கோடியே 80 லட்சம் அளவிற்கு வணிகம் நடந்திருப்பது தெரியவந்தது.
ஜிஎஸ்டி கணக்கின் பயனாளர் பெயர், கடவுச்சொல். இ மெயில், அதற்கான செல்போன் இணைப்பு எண் என அனைத்தும் ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் பயன்படுத்தி வந்ததும், ஜிஎஸ்டி ரத்து செய்ய அவர் மூலம் விண்ணப்பித்த போது, மோசடியாக அந்த எண்ணை, 6 நிறுவனங்களுக்கு அவர் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu