ஈரோடு: ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு!

அந்தியூர் அருகே ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம், தனது உறவினர்கள் 100 பேருடன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3½ ஏக்கர் விளை நிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்ப தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த 2 பேரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவர்கள் பெயருக்கு கிரயம் செய்தேன். அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினர்.
கடந்த 2019-ம் ஆண்டு அசல், வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதித்தொகையை வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினர். இதற்கிடையில் மேற்கண்ட 2 பேரும், ஈரோடு மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனர். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்ட விரோதமான முறையில் மேற்படி கவுன்சிலர் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே அவர்களை அழைத்து பேசி எனது உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu