ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் புல்லட் உதவியுடன் சோதனை செய்த போது எடுத்த படம்.
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் இரண்டாவது முறையாக இன்று (நவ.12) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்யும் போது அது புரளி என தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில் ஈரோடு செட்டிபாளையம் பூந்துறை ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்தனர். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு பகுதியாக நவீன கருவிக்கொண்டு சோதனை நடத்தினர்.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்களும் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்து தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதே பள்ளிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் புல்லட் உதவியுடன் நீண்ட நேரம் சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.
பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu