மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு
X
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டி செல்வி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1¼ வயதில் தீபாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் தற்போது குடும்பத்துடன் மொடக்குறிச்சி எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

குமார் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். குழந்தை தீபாஸ்ரீ அழுது கொண்டே இருந்தால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால் குழந்தையை நன்றாக கவனித்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று குமாரின் மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பாண்டிச்செல்வி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அப்போது, வீட்டில் கணவரிடம் மகள் தீபாஸ்ரீயை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், தீபாஸ்ரீ திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததைக் கண்டு குமார் அதிர்ச்சி அடைந்தார்.உடனே குமார், குழந்தையை மீட்டு எழுமாத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து, குமார் குழந்தையை மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை தீபாஸ்ரீ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து அவரது தாய் பாண்டிச்செல்வி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story