ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 899 மனுக்கள் பெறப்பட்டன: நம்பியூரில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.22) வியாழக்கிழமை நடந்த ஜமாபந்தியில் 899 மனுக்கள் பெறப்பட்டன. நம்பியூரில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று (மே.22) வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் முகாம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி, நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, நம்பியூர் உள்வட்டத்தைச் சேர்ந்த புலவபாளையம், ஒலாலக்கோவில், எம்மாம்பூண்டி, நம்பியூர், நிச்சாம்பாளையம், சாந்திபாளையம், கோஷணம், சின்னாரிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 108 மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, ஜமாபந்தி தீர்வாயத்தில் நம்பியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், இதுகுறித்து அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் 1434-ம் பசலிக்கான ஜமாபந்தி இன்று (மே.22) தொடங்கப்பட்டு வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. எனவே, பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம்.
இன்று அனைத்து வட்டங்களிலும் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், 899 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், நாளை (மே.23) நம்பியூர் வட்டம், ஏலத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஏலத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, கரட்டுப்பாளையம், குருமந்தூர், கடத்தூர், ஆண்டிபாளையம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), லோகநாதன் (வேளாண்மை), நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் கேசவமூர்த்தி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu