ஈரோடு மாவட்டத்தில் 7.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 7.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று (ஜன.3) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 878 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 355 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1,233 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான பச்சரிசி, புழுங்கல் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் 2025ம் ஆண்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,379 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறும் வகையில் நாளொன்றுக்கு 200 ரேஷன் அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களுக்கு குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்கும் பணி இன்று (ஜன.3) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு பகுதி வாரியாக வரும் ஜன.8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் தங்களது நியாய விலைக்கடைகளில், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட உரிய நேரத்தில் வருகை புரிந்து கூட்ட நெரிசலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu