ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 728 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம். உடன், ஈரோடு எம்பி பிரகாஷ் உள்ளார்.
ஈரோட்டில் இன்று (மார்ச் 15) நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 728 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,928 ஆண்களும் 1,385 பெண்களும் 36 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 3,349 வேலைநாடுநர்கள் பதிவு செய்தனர். இதில் 372 ஆண்களும், 344 பெண்கள், 12 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 728 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு, கோவை) ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ரா.ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) டி.டி.சாந்தி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கா.து.கவிதா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் வெங்கடாசலம், கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், வேலைநாடுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu