108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஈரோடு மாவட்டத்தில் 4.21 லட்சம் பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஈரோடு மாவட்டத்தில் 4.21 லட்சம் பேர் பயன்
X

108 ஆம்புலன்ஸ்

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 4.21 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளதாகவும், 709 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 4.21 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளதாகவும், 709 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜி.வி.கே, இ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு கடந்த 2008ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஈரோடு, பவானி. சத்தி, கோபி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் மலைப்பகுதியில் மட்டும் 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அழைப்பு வந்த 8 முதல் 14 நிமிடங்கள் வரை நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மாவட்ட மேலாளர் கணேஷ் கூறியதாவது: 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 பேர் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் குறிப்பாக, 84 ஆயிரத்து 105 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 1 லட்சத்து 992 பேர் சாலை விபத்திற்காக உபயேகித்துள்ளனர்.

இதில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 709 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன. இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டர், ஈ.சி.ஜி. மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆம்புலன்ஸ்களில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் மருத்துவமனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 40க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் 108 சேவையை இன்னும் செம்மைபடுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகின்றன. கர்ப்பணி பெண் கள் இலவசமாக இச்சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹாட்ஸ்பாட் எனும் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வாகன விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil