கோபி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கைது செய்யப்பட்ட 4 பேரையும் படத்தில் காணலாம்.
கோபி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 36). இவருடைய மனைவி பாலாமணி (29). இவர்கள் இருவரும் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு வந்தனா (10) என்ற மகளும், மோனீஷ் (7) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த ஜன.15ம் தேதி கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து, குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து மகள் மற்றும் மகனை குடிக்க வைத்தனர். இதில், கணவன், மனைவி இருவரும் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
பின்னர், அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தனசேகர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.
அதில், பெருந்துறை புதுதொட்டிபாளையத்தைச் சேர்ந்த சேது என்கிற கோபி சங்கர் (வயது 25), சிறுவலூர் பதிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி (வயது 52), அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவருடைய மனைவி வெண்ணிலா (வயது 38), சண்முகம் என்பவருடைய மனைவி சுமதி (வயது 40) ஆகியோர் எங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று தந்தனர்.
இதற்காக அதிக தொகையை கமிஷனாக பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றினர். இதனால், அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். மேலும், நிதி நிறுவனத்தில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் வசூலித்ததால் நாங்கள் மிகுந்த கடனுக்கு உள்ளானோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள இவர்கள் 4 பேர் தான் காரணம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu