ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள்களில் வந்தடைந்த 2,035 டன் யூரியா
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர் கார்பரேஷன் நிறுவன யூரியா உரம் 810 மெட்ரிக் டன் ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது. ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட யூரியா உரத்தை ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகள், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, மேட்டூர் வலதுகரை வாய்க்கால், காலிங்கராயன் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் நெல், மக்காச்சோளம், கரும்பு, வாழை, இதர பயிர்களுக்கு யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது.
உர தேவைக்கேற்ப அரசு வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடம் இருந்து உரங்களைப் பெற்று தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 1.225 மெட்ரிக் டன் மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் யூரியா உரம் கடந்த 24ஆம் தேதி ரயில் மூலம் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர் கார்பரேஷன் நிறுவனம் மூலம் 810 மெட்ரிக் டன் யூரியா மற்றும் அம்மோனியம் சல்பேட் 1,590 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் நேற்று ஈரோடு வந்தது.
இந்த யூரியா அம்மோனியம் சல்பேட் உரங்கள் தேவைக்கேற்ப சில்லறை உர விற்பனை நிலையங்களுக்குப் பிரித்து அளிக்கப்படவுள்ளது. உர விற்பனை நிலையங்கள் யூரியா உரத்துடன் வேறு எவ்வித இடுபொருள்களையும் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985இன் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu