கோபிசெட்டிபாளையம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
கைது செய்யப்பட்ட தினேஷ் மற்றும் மவுலி சங்கர்.
கோபிசெட்டிபாளையம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்ற வாலிபர்களை தனிப்படை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் கூளை மூப்பனூரை சேர்ந்தவர் சுப்பையாள் (65). மூதாட்டியான இவர் கடந்த 10-ம் தேதி மாலை அதே பகுதியில் வேலைக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுப்பையாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சுப்பையாள் போலீசில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் சிறுவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மானோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதனையடுத்து, கோபி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் கோபி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சி.சி.டி.வி. கேமரா பதிவான இருசக்கர வாகனத்தின் காட்சிகளை வைத்து கோபி வேட்டைக்காரன் கோவில் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர்கள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் தினேஷ் (24) என்பதும், இவரது நண்பர் அரவிந்த்குமார் என்பவரது மகன் மௌலிசங்கர் (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் இருவரும் மூதாட்டி சுப்பையாளிடம் தங்க தாலிக்கொடியை பறித்து சென்றதும், கோபியில் மருத்துவரின் வீட்டில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து திருடியதும், கோபி சுற்று வட்டார பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்க சங்கிலிகளை மீட்ட தனிப்படை போலீசார் சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மௌலிசங்கர் பவானி பகுதியில் உள்ள டிராக்டர் ஷேரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாகவும், தினேஷ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஆடம்பரமாக இருப்பதற்காக இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu