ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: செயற்பொறியாளர் உள்பட 2 பேரிடம் விசாரணை!

சேகர், சுரேஷ் மணி.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது, தொடர்பாக செயற்பொறியாளர் உள்பட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மாவட்ட அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடத் தின் 4-ம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (வயது 52) என்பவரும், களப்பணி மேற்பார்வையாளராக சுரேஷ் மணி (வயது 48) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களிடம் அரசு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று 4-வது மாடியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒப்பந்ததாரர் ஒருவர், 500 ரூபாய் நோட்டு கட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொண்ட பையை 4வது மாடியில் கொடுத்துவிட்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். அந்த கைப்பை களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணியிடம் இருந்த போது, கண்காணிப்பில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செயற்பொறியாளர் சேகர், களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணி ஆகியோர் அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் 7.5 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.3 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, செயற்பொறியாளர் மற்றும் களப்பணி மேற்பார்வையாளர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu