வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்குப்பதிவு
நிலா மோசடியில் தலைமறைவாகிய சங்க நிர்வாகிகள்.
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த அய்யந்துரை (வயது 62). ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியாக உள்ளார். இவர், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இதில், வியாபாரிகளின் நலனுக்காக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக 800 பேர் உள்ளனர். அதிமுக நிர்வாகிகள் மார்க்கெட் சங்கத்தின் தலைவராகவும், அதிமுக.வின் மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல் மேட்டினை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும் அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு விவிசிஆர் நகரை சேர்ந்த முருகசேகர் என்கிற நாதன், பொருளாளரும், அதிமுக வார்டு செயலாளராக வைரவேல், துணை தலைவரும், அ.தி.மு.க., வார்டு செயலாளருமான குணசேகரன், துணை செயலாளரும், அ.தி.மு.க., உறுப்பினருமான ஆறுமுகம் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர்.
இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் உறுப்பினர்களை அழைத்து கூட்டம் நடத்தினர். அதில், சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 800 சதுர அடி வீட்டு மனை நிலம் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.50ஆயிரம் மற்றும் அரசு ஒப்புதலுக்காக ரூ.20 ஆயிரம் வீதம் வழங்குமாறு கேட்டனர். இதன்பேரில், சங்க உறுப்பினர்கள் 800 பேரில் வெறும் 350 உறுப்பினர்கள் மட்டும் ஒப்புக்கொண்டு அவர்கள் கூறியவாறு ரூ.70ஆயிரம் ரொக்கத்தை செலுத்தி அதற்கான ரசீதினையும் பெற்றுக்கொண்டனர். சங்க உறுப்பினர்களிடம் ரூ.2 கோடி வசூலித்து, அந்த பணத்தில் ஈரோடு நசியனூரில் 20.5 ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை சங்க உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அய்யந்துரை புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க உறுப்பினர்களிடம் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சங்க நிர்வாகிகளான பி.பி.கே. பழனிசாமி, முருகசேகர், வைரவேல், குணசேகரன், ஆறுமுகம் உற்பட 11 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 11 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu