ஈரோடு மாவட்டத்தில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கூரப்பாளையம், நந்தா இயன்முறை கல்லூரியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று (டிச.3) நடைபெற்றது. இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், 10 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டதில், 240 மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டில் 8260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் அனைத்தும் இணையதளம் மூலம் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தினை அணுகி விண்ணப்பித்து, பயன்பெறலாம்.
3 சக்கர வாகனங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் 50 நபர்களுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்குதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பாக, செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பொருட்டு, இ - சேவை மையத்தில் PARIVAHAN என்ற இணையதளத்தில் வழியாக பதிவேற்றம் செய்திட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தெரிவு செய்யப்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு தொகை செலுத்துவதற்கு ஏதுவாக, கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆர்.என்.புதூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, செங்கோடம்பாளையம் கொங்கு அறிவாலயம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி என மொத்தம் 9 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டதில், முதல் 3 இடங்களை பெற்ற 240 மாணவ, மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தொடர்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி, நந்தா கல்வி நிறுவன தலைவர் வி.சண்முகன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைத்து நடத்திய விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu