கூட்டுறவு வார விழா: ஈரோடு மாவட்டத்தில் 1,193 பேருக்கு ரூ.15.85 கோடியில் கடனுதவி வழங்கிய அமைச்சர்
கூட்டுறவு வார விழாவில் ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் முத்துசாமி விருது வழங்கிய போது எடுத்த படம். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் நடைபெற்ற மாவட்ட அளவிலான 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், 1,193 நபர்களுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், கூட்டுறவுத் துறையின் சார்பில், காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டது. 1904ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் துவக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் தொழில்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுத்து செல்வதற்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக உள்ளது.
ஈரோடு மாவட்டமானது 2023-2024-ல் மாநிலத்திலேயே அதிகளவில் பயிர்கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது. இதில் ஏறத்தாழ 1,069 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல 1,212 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கூட்டுறவுத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், கூட்டுறவுத்துறையின் சார்பில், இன்று (நவ.15) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அளவில் 1,193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுவணிக கடன், வீட்டுவசதி கடன், முத்ரா கடன், மத்திய கால கடன், சிறுவணிக கடன், பயிர் கடன், நடைமுறை மூலதன கடன், டாப்செட்கோ கடன், சம்பள கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் புதிய கிளை அலுவலகங்கள், புதிய நியாயவிலை கட்டிடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவ சங்கங்களை நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக வகை மாற்றுதல், சிறு பல்பொருள் அங்காடி மற்றும் பண்மை பசுமை அங்காடிகள் திட்டம், சிறுதானியம் விற்பனை உள்ளிட்ட ரூ.82 லட்சம் மதிப்பீட்டிலான 31 புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.
71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், த்ைதறி கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதித்துறை சங்கங்கள், சமூகநலத்துறை - தொழிற் கூட்டுறவு சங்கம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை கூட்டுவுறுவுகள், சிறப்பாக செயல்படும் தனிநபர்களுக்கு விருதுகளை வழங்கினார். முன்னதாக, கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினையும் அவர் பார்வையிட்டார்.
இவ்விழாவின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் சு.பிரகாஷ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, இணைப்பதிவாளர் செல்வக்குமரன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதாபானு, கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி உட்பட கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu