உக்ரைனில் உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம்: அந்தியூர் மாணவி பேட்டி

உக்ரைனில் உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம்: அந்தியூர் மாணவி பேட்டி
X

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவி மௌனி சுகிதா

உக்ரைனில் உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம் என்று நாடு திரும்பிய அந்தியூர் மாணவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் லிவிவ் என்ற பகுதியில் மருத்துவம் படிக்க சென்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜாகுணவதி தம்பதியரின் மகள் மௌனி சுகிதா மற்றும் அவருடன் படிக்கும் மருத்துவ மாணவ மாணவியர்கள் 12 பேர் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினர். பின்னர் நேற்று இரவு கோவை வந்த மருத்துவ மாணவி மௌனி சுகிதா நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்தடைந்தார். இதுகுறித்து மாணவி மௌனி சுகிதா நிருபர்களுக்கு பேட்டியில், நான் உக்ரைன் நாட்டில் உள்ள லிவிங் பகுதியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் தமிழகத்தில் இருந்து படிக்க சென்றோம்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே திடீர் போர் அறிவிக்கப்பட்டதால், அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டோம். தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தார். மேலும் அயல்நாடு வாழ் தமிழர் மற்றும் மறுவாழ்வு ஆணையாளர் ஜெஜிந்தாவிடம், அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் விரைவில் தமிழ்நாடு அழைத்து செல்வதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் தைரியம் கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஹங்கேரி ரயில் நிலையத்திற்கு சென்று சேர்ந்தோம். அங்கிருந்து, ஹங்கேரி விமான நிலையத்திற்கு செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தோம்.

அதன் பிறகு ஒரு வழியாக 12 மாணவிகளை மட்டும் அங்கிருந்து ஹங்கேரி விமான நிலையத்திற்கு அனுப்பினர். அதன்பின் ஹங்கேரி விமான நிலையத்தில் இருந்து புதுடில்லி வந்தடைந்தோம். அங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து, நேற்றிரவு கோவை வந்து, நள்ளிரவு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இதற்கிடையில், உக்ரைனில் இருந்தபோது வெளியே நடமாட முடியாமலும், உணவு பொருட்கள் வாங்கவும் மிகவும் சிரமப்பட்டேன். இதனால் ஒரு சில வேளைகளில் உணவு இல்லாமல் மருத்துவ மாணவர்கள் பட்டினி கிடந்தோம். எப்படியோ ஒரு வழியாக சொந்த ஊருக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என கூறிய மருத்துவ மாணவி மௌனி சுகிதா, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்