திண்டுக்கல் நகரில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல்லில் இருவரது வீடுகள் அலுவலகம், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்லில், பிரபல தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மணல்குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில் , அமலாக்கத் துறை சோதனை; கோவிந்தனின் மருமகன் கே.கே.ஆர்.வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என்பது முதல் வழக்கு. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
தற்போது திமுக ஆட்சியிலும் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 3 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதனால் அவரது இலாகா பறிக்கப்பட்டு தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் இன்று மீண்டும் அமலாக்கத்துறையின் சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இன்றைய சோதனையானது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமல்லாது, அவருடன் தொழில் ரீதியான தொடர்புகளில் இருந்த தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்களும் இம்முறை அமலாக்கத்துறை பிடியில் சிக்கி இருக்கின்றன.
அப்படி அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய இரு தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன். 7 ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் பெயர்கள் தலைப்புச் செய்திகளாக அடிபட்டன
சில ஆண்டுகள் பின்னோக்கி போகலாம்... 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த தருணம்.. ரூ2,000 நோட்டு அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. அத்தருணத்தில் அதிமுக ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டிக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை இணைந்து சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் ரூ147 கோடி ரொக்கம், அதுவும் ரூ2,000 புத்தம் புது நோட்டு கட்டுகள், 178 கிலோ தங்கம் என அள்ள அள்ள குறையாமல் கிடைத்து வந்தது. சேகர் ரெட்டியின் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சிக்கியவர்கள்தான் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம்.
புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டணத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்; அவரது உறவினர் மாஜி சர்வேயர் ரத்தினம். இருவரும் மணல் குவாரி ஒப்பந்தங்களில் கொடி கட்டிப் பறந்தவர்கள். 'மணல்' ஆறுமுகசாமி வசம் இருந்த குவாரிகள் இந்த இருவரிடமும் கை மாறிய காலம் என்பதால் அரசியல்வாதிகள் அதிகார வட்டங்களில் பண மழை பொழிந்தது.
இருவரது வீடுகள், தொழில் நிறுவனங்கள் என புதுக்கோட்டையிலும் திண்டுக்கல்லிலும் இடைவிடாத சோதனைகள் நடந்தன. திண்டுக்கல் ரத்தினத்தின் தரணி குழுமத்தின் கீழ் செல்வி டிரான்ஸ்போர்ட், செல்வி சேம்பர், தரணி ரியல் எஸ்டேட், தரணி லேண்டு டெவலப்பர்ஸ், செல்வி மினரல்ஸ் மற்றும் வேதா கிரீன் பவர் பிரைவேட் லிமிடெட் என ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டன. அத்தனை இடங்களிலும் அமலாக்கத்துறை அப்போது உள்ளே நுழைந்தது.
புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான அத்தனை இடங்களையும் அமலாக்கதுறை சல்லடை போட்டு ஏராளமான ஆவணங்களை அள்ளியது. அப்புறம் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோருடன் கூட்டாளிகளான ராமச்சந்திரனும் திண்டுக்கல் சர்வேயர் ரத்தினமும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் பெயர்கள் செந்தில் பாலாஜி வழக்கில் அடிபட்டு அமலாக்கத்துறை மீண்டும் சோதனை மேற்கொண்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu