தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கௌரி விரத சிறப்பு வழிபாடு
கேதார கௌரி விரத சிறப்பு வழிபாடு
தீபாவளி பண்டிகையை யொட்டி வரும் அமாவாசை தினத்தில் குடும்ப நன்மை மற்றும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று பெண்கள் கேதார கெளரி விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினமான இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கெளரி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கேதார கெளரிரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு மற்றும் பூக்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் மற்றும் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி.ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கெளரி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பாரப் பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்ட அள்ளி உள்ளிட்ட அனைத்து ஊர்களில் உள்ள கோவில்களிலும் கேதார கெளரி விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu