வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
தர்மபுரி மாவட்ட வனத்துறையின் சார்பாக வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஆகியோர்களுடன் இனைந்து 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.
அவ்வாறு நடந்து முடிந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில் தர்மபுரி வனக்கோட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் மற்றும் கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்களில் 27 ஈர நிலங்களை அடையாளம் கண்டு, தேர்வு செய்து பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 109க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பறவைகள் காணப்பட்டது. அதிலும், அழிந்து வருகின்ற இனமான சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிளி, மயில், நாரை, கொக்கு, இரட்டை வால் குருவி, நீர் காகம், கழுகு, காகம், தூக்கனாங்குருவி, மீன்கொத்தி பறவை, நீர்கோழி, மைனா மற்றும் காட்டுக் காகம் ஆகியவை தோராயமாக 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu