தருமபுரி மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் திவ்யதர்சினி.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 376 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, இக்கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஊட்டமலை கிராமம், கூத்தப்பாடி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி அன்பரசி அவர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டம், வன்னியர் தெருவைச் சேர்ந்த கோகுல் என்ற சிறுவன் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது தாயார் சாந்தி அவர்களுக்கும், காரிமங்கலம் வட்டம், பைசு அள்ளி கிராமத்தை சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி மரணமடைந்த்தை தொடர்ந்து தாயார் செல்வி அவர்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

மேலும், நல்லம்பள்ளி வட்டம், கோணங்கி அள்ளி, சின்ன பங்குனத்தம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் மாற்றுத்திறனாளியான சின்னசாமி என்பவருக்கு உடனடியாக ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் வழங்கினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு . அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) சீனிவாசசேகர், உதவி ஆணையர் (கலால்) தணிகாச்சலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil