சாலையின் இருபுறமும் முட்புதர்கள், அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்
சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்
பென்னாகரம் வட்டத்தில் நாகாவதி அணையை அடுத்த ஏர்ரப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை நல்லம்பள்ளி, கெங்கலாபுரம், ஏலகிரி வழியாக வனப்பகுதிக்கு இடையில் செல்கிறது. மேலும் இந்த சாலை எர்ரப்பட்டி அடுத்த அரகாசனைஅள்ளி, சின்னம்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பென்னாகரம்-மேச்சேரி சாலையில் இணைகிறது.
நாள்தோறும் அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்று இச்சாலையின் வழியாக சென்று வருகிறது. ஏலகிரியை அடுத்த எள்ளுகுழி என்னும் பகுதியில் வனப்பகுதியில் செல்லும் இச்சாலையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்த சாலையில் பேருந்து உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, இருசக்கர வாகனங் ளில் செல்வோர் சாலை ஓரம் செல்ல முடியாமல் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் இந்த சாலை உள்ளதால் வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரோட்டில் இரு புறங்களிலும் முப்புதர்கள் உயர்ந்து வளர்ந்திருப்பதால் நாள் தோறும் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. வனப்பகுதியாக இருப்பதால் சிறுத்தை, கரடி போன்றவை புதரில் பதுங்கி இருந்து தாக்க கூடும் என்று அந்த வழியாக செல்பவர்கள் அஞ்சுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இப்பகுதியில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது. இனியாவது மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
கிராமப் பகுதிகளுக்கு தரமான சாலைகள் அமைத்தும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இனியாவது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu