பென்னாகரம் அருகே இன்று காலை பட்டாசு குடோனில் வெடி விபத்து
வெடி விபத்து நடந்த பட்டாசு குடோன்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு குடோனில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான மூத்த தீயணைப்பு அலுவலர் நரசிம்மன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரை மட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலெட்சுமி, காவ ஆய்வாளர் முத்தமிழ் செல்வன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு காவல்துறையினரால் கைப்பற்றபட்ட வெடி பொருட்கள் குறித்தான வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெடிவிபத்து நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu