எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயி தற்கொலை- மறியல்
தற்கொலை செய்து கொண்ட கணேசன்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் கடந்த, மூன்று நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க வருவாய்த்துறையினர், போலீசாருடன் நில அளவீடு செய்து வருகின்றனர். இதற்கு, இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துடன் நேற்று முன்தினம், சில விவசாயிகள் தீ குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாலவாடி, கரியப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்யும் பணியை துவங்கியதை கண்டித்து, இப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட கரியப்பனஹள்ளியை சேர்ந்த விவசாயி கணேசன், (வயது45,) தனது நிலம் பறிபோகும் என்ற அச்சத்தில், தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்த, அவரது உறவினர்கள், விவசாயிகள் கணேசன் உடலை செக்காரப்பட்டியில் தர்மபுரி பென்னாகரம் சாலையில் வைத்து மதியம், 12:50 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி., கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், இறந்த கணேசனின் குடும்பத்துக்கு, 50 லட்ச ரூபாய் இழப்பீடு, அவரது குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எரிவாயு குழாயை இப்பகுதிகளில் அமைக்க கூடாது என்றனர். தொடர்ந்து கொட்டும் மழையில் உடலை ரோட்டில் வைத்து சாலை மறியலை தொடர்ந்தனர்.
இதில், முடிவு எட்டாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமையில் விவசாயிகள், மற்றும் கணேசன் மனைவி சின்னவள்,தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினியை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாலை, 6:30 மணிக்கு போராட்டம் பகுதிக்கு வந்த டில்லிபாபு, கணேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், அவரது இறப்புக்கு இழப்பீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு உடனடியாக கடிதம் எழுதுவதாகவும், கெயில் நிறுவனத்தினர் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்காமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக கலெக்டர் திவ்யதர்ஷினி உறுதியளித்துள்ளார். என, கூறினார்.
கெய்ல் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மீண்டும் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை துவங்கினால் ஏழு ஊராட்சிகளை சேர்ந்த பத்தாயிரம் பேரை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் ஆறரை மணி நேரம் நடைபெற்று வந்த சாலைமறியல் முடிவுக்கு வந்தது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர் இதனால் தர்மபுரி பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu